சமூகத்தில் நடக்கும் அநியாயங்களை சுட்டிக்காட்டி அதை அழுத்தமாக தனது படத்தில் பேசும் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா அச்சர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம்தான் மை லார்ட். பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி உள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்



மை லார்ட்: திரைவிமர்சனம் - Related Image

முத்து சிற்பி (சசிகுமார்), சுசீலா (சைத்ரா அச்சர்) இருவரும் தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்கள். இருவருக்கும் இடையே காதல் மலர திருமணம் செய்துகொள்கிறார்கள். திருமணத்திற்கு பின் ஒரு நாள் சுசீலா திடீரென மயங்கி விழுந்து அவர் உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறுகிறது.

தனது மனைவிக்கு வந்துள்ள பிரச்சனையை சரி செய்ய பல மருத்துவமனைகளுக்கு இருவரும் ஏறி இறங்குகிறார்கள். வட்டி வாங்கிய பணம் செல்வாகிறதே தவிர, நோய் சரியாகவில்லை. தொடர்ந்து கடன் வாங்கி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் 2 லட்சத்துக்கும் மேல் கடன் ஆகிவிடுகிறது.



மை லார்ட்: திரைவிமர்சனம் - Related Image

இந்த கடனை முத்து சிற்பியால் வாழ்நாள் முழுவதும் அடைக்க முடியாத என தெரிந்துகொண்டு, அவர் மற்றும் அவருடைய மனைவி இருவருடைய கிட்னியை கொடுத்துவிடுங்கள் என கூறுகிறார்கள். இதற்கு பயந்து ஊரை விட்டு வெளியேறுகிறார்கள்.

இந்த சமயத்தில், தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் முத்து சிற்பி மற்றும் சுசீலா இறந்துவிட்டதாக நாடகத்தை நடத்தி, அவர்களுக்கு இறப்பு சான்றிதழ் பெற்று, அரசாங்கத்தில் இருந்து கிடைக்கும் நிவாரண நிதியை அந்த வட்டி காரர் வாங்கி விடுகிறார்.



மை லார்ட்: திரைவிமர்சனம் - Related Image

இதை அறிந்து மீண்டும் ஊருக்கு வருகிறார்கள் முத்து சிற்பி, சுசீலா. ஆனால், அந்த வட்டி விடுபவர் இவர்களை அடித்து துரத்தி விடுகிறார்.

இதன்பின் பத்திரிகையாளர் குரு சோமசுந்தரத்தை சந்தித்து நடந்ததை கூறி, இதற்கான நியாயம் வேண்டும் என போராடுகிறார்கள்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, உடல்நிலை சரியில்லாமல், கிட்னி கிடைத்தால் மட்டுமே உயிர் வாழ முடியும் என்கிற தருவாயில் மத்திய அமைச்சர் போராடி வருகிறார் ஆஷா சரத்.

முத்து சிற்பியின் கிட்னி மத்திய அமைச்சருக்கு சரியாக பொருந்தும் என்பதை அறிந்து முத்து சிற்பியிடம் வந்து கிட்னி தரும்படி கேட்கிறார்கள். இதன்பின் அவர் எடுத்த முடிவு என்ன? அந்த முடிவால் அவர் என்னென்ன விளைவுகளை அனுபவித்தார்? அவர் கேட்ட நீதி அவருக்கு கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

கதாநாயகன் சசிகுமார் முத்து சிற்பி என்கிற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். சில காட்சிகளுக்கு முன் நம் கண்ணனுக்கு அவர் முத்து சிற்பியாக மட்டுமே தான் தெரிகிறார். எங்கேயுமே வழக்கமான சசிகுமாரை நம்மால் பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு அந்த ரோலில் பட்டையை கிளப்பினார்.

அதே போல் கதாநாயகி சைத்ரா அச்சர் நடிப்பும் யதார்த்தமாக இருந்தது. சில இடங்களில் சசிகுமாருக்கு இணையான நடிப்பு வெளிப்படுத்தி நம்மை வியக்க வைத்துள்ளார். 3BHK படத்தை விட மை லார்ட் இன்னும் நல்ல வரவேற்பை தமிழக ரசிகர்கள் மத்தியில் பெற்று தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவர்களுடன் குரு சோமசுந்தரம், ராம்குமார் பிரசன்னா, ஆஷா சரத் என பலரும் தங்களது சிறப்பான நடிப்பால் திரைக்கதையை அழகாக கொண்டு செல்ல உதவியுள்ளனர்.

இயக்குநர் ராஜூ முருகன் ஜப்பான் படத்தில் விட்டதை மை லார்ட் படத்தில் பிடித்துவிட்டார். ஜப்பான் திரைப்படம் ராஜூ முருகன் ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை தந்தது. ஆனால், மை லார்ட் படத்தின் மூலம் தற்போது கம்பேக் கொடுத்துள்ளார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்த கிட்னி திருட்டு விஷத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார்.

ஏழை மக்களிடம் இருந்து எப்படி கிட்னி திருடப்படுகிறது. அவர்களின் ஏழ்மையை எப்படி பணக்காரர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பதை வெளிப்படையாக இப்படத்தில் காட்டியிருக்கிறார். அந்த காட்சிகள் எல்லாம் வேற லெவல்.

ராஜூ முருகன் படம் என்றாலே வசனங்கள் தீயாக இருக்கும். இப்படத்திலும் வசனங்களை மிகவும் தைரியமாக எழுதியுள்ளார். 'அரசாங்க அலுவலகத்திற்கு வந்துவிட்டு காசு இல்லை என்றால் எப்படி' என்பது போல் பல வசனங்கள் நம்மை கைதட்ட வைக்கிறது. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் திரைக்கதையின் சிறப்பு. பல காட்சிகள் நம்மை யோசிக்க வைக்கிறது. சில இடங்கள் சற்று இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம்.

ஷான் ரோல்டன் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். அதே போல் ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. குறிப்பாக சசிகுமாரின் என்ட்ரி சிங்கிள் ஷாட் ரசிக்கும்படியாக இருந்தது. எடிட்டிங் ஓகே.

பிளஸ் பாயிண்ட்

சசிகுமார், சைத்ரா அச்சர், குரு சோமசுந்தரம், ராம்குமார் பிரசன்னா, ஆஷா சரத் ஆகியோரின் நடிப்பு

கதைக்களம்

பின்னணி இசை

ஒளிப்பதிவு

இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ்

வசனங்கள்

மைனஸ் பாயிண்ட்

திரைக்கதையில் சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு

மொத்தத்தில் மை லார்ட் இயக்குநர் ராஜூமுருகனின் கம்பேக். கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்.