கிறிஸ்டியன் பேல் நடிப்பில், மேகி கில்லென்ஹாலின் இயக்கத்தில் ஹாலிவுட்டில் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள The Bride! திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போம்.

கதைக்களம்



The Bride! திரை விமர்சனம் - Related Image

அமெரிக்காவின் சிகாகோவில் 1936ஆம் ஆண்டு மதுவிருந்து ஒன்றில் போதை தலைக்கேறியதால், லூபினோ என்ற கேங்ஸ்டரின் குற்றச் செயல்களை கூவுகிறாள் ஐடா.

இதனால் ஆத்திரமடைந்த அவரது உதவியாளர்கள் அவளை தாக்க, ஐடா படிக்கட்டுகளில் இருந்து விழுந்து இறந்துவிடுகிறாள்.



The Bride! திரை விமர்சனம் - Related Image

அதன் பின்னர் 1819ஆம் ஆண்டில் டாக்டர் ஃப்ராங்கென்ஸ்டெய்ன் உயிர்ப்பித்த ஃப்ராங்க், பெண் விஞ்ஞானி-மருத்துவர் கார்னெலியா யூஃப்ரோனியஸை தேடி வருகிறான்.

அவரது படைப்புகளை படித்துவிட்டு அவரை தேடி வந்ததாக கூறும் ஃப்ராங்க், தனக்கு ஒரு பெண் துணை வேண்டும்; அதுவும் என்னைப்போலவே இறந்த பெண்ணை உயிர்பித்து தர வேண்டும் என்று கேட்கிறான்.



The Bride! திரை விமர்சனம் - Related Image

அதற்கு கார்னெலியா யூஃப்ரோனியஸும் சம்மதிக்க, இருவரும் இடுகாட்டிற்கு சென்று ஐடாவின் சடலத்தை எடுத்து வருகின்றனர்.

பின் உயிர்பிக்கப்பட்டு எழும் அவளுக்கு தன்னைப் பற்றிய எதுவும் நியாபகம் இல்லை. ஃப்ராங்க் அவளை ஒரு பார்ட்டிக்கு அழைத்துச் செல்ல, அங்கு சிலர் ஐடாவிடம் தவறாக நடந்து கொள்கின்றனர்.

இதனால் ஃப்ராங்க் பதற்றமடைந்து ஐடாவை வெளியேற்றி அழைத்துச் செல்ல, பின்தொடர்ந்து வரும் இருவர் மீண்டும் சீண்டுகின்றனர்.

அவர்களால் பொறுமையை இழந்த ஃப்ராங்க், இருவரையும் கொடூரமாக தாக்கி கொல்கிறான். இதனையடுத்து ஃப்ராங்க், ஐடா அங்கிருந்து ஓட அவர்கள் புகைப்படம் எடுக்கப்படுகின்றனர்.

கொலைகளை செய்தது செய்தியாகிவிட ஃப்ராங்க் எங்கேயாவது சென்றுவிட்டு என்று ஐடாவிடம் கூறுகிறான். ஆனால் அவளோ ஃப்ராங்க்குடன் பயணிக்க விரும்புவதாக கூறுகிறாள்.

அதன் பின்னர் பொலிஸிடம் இருந்து ஃப்ராங்க், ஐடா தப்பித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

தமிழ் சினிமாவில் விக்ரமை போல, ஹாலிவுட்டில் படத்தின் கதைக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பது, ஏற்றுவது என புகழ்பெற்றவர் கிறிஸ்டியன் பேல்.

இந்தப் படத்தில் அதையும் தாண்டி மேக்கப்பில் மெனக்கெட்டுள்ளார் என்பது காட்சி காட்சி தெரிகிறது.

டார்க் நைட் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மேகி கில்லென்ஹால் இயக்கத்தில் பேல் இப்படத்தில் ஃப்ராங்கென்ஸ்டெய்ன் ஆகவே வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம்.

குறிப்பாக, திரைப்பட நடிகரான ஜேக் கில்லென்ஹாலை நேரில் பார்த்த பரவசத்தில் அவரிடம் பேசும் பேல், அப்படியே கோபமாக மாறும் காட்சி மிரட்சி.

புகழ்பெற்ற பேண்டஸி கதையான ஃப்ராங்கென்ஸ்டெய்ன், தனக்கென ஒரு பெண் துணை வேண்டும்; அவளுடன் இந்த சாகா வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்பது சுவாரஸ்மான கதைதான்.

ஆனால், இயக்குநர் பெண்ணிய கருத்துக்களை திரைக்கதைக்குள் வலிந்து திணித்ததால், பேண்டஸி சுவாரஸ்யத்தை காட்சிகள் மட்டுப்படுத்திவிட்டன.

ஆங்காங்கே சில காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தி சுவார்ஸமாக சென்றாலும், அடுத்த காட்சியே புரட்சி பாணிக்கு நகர்வதால் சலிப்பு ஏற்படுகிறது.

ஜெஸ்ஸி பக்லி ஐடா/The Bride கதாபாத்திற்கு பொருந்திபோயிருக்கிறார். பெண்ணிய போராளியாக அவர் படம் முழுக்க வாதங்களையும், கேள்விகளையும் முன் வைக்கிறார்.

தன்னை பாலியல் ரீதியாக சீண்டுபவர்களை எதிர்க்கும் அவர், பிற பெண்களிடம் அத்துமீறுபவர்களை எதிர்த்து கேள்வி கேட்டு புரட்சி செய்கிறார்.

ஜெஸ்ஸி பக்லி நட்சத்திர நடிகரான கிறிஸ்டியன் பேலிற்கு நடிப்பில் பல காட்சிகளில் டஃப் கொடுக்கிறார்.

இருவரையும் கண்டுபிடிக்கும் துப்பறியும் கதாபாத்திரங்களில் பீட்டர் சர்ஸ்கார்டும், பெனிலோபி க்ரூஸும் இயல்பான நடிப்பை தந்துள்ளனர்.

பெனிலோபி க்ரூஸ் படம் முழுக்க புகைப்பிடித்துக் கொண்டே இருப்பது, தனது ஆளுமையை காட்டுவது போல் காட்சியமைக்கப்பட்டாலும் வலிந்து திணித்தது போல் உள்ளது.

1930களின் அமெரிக்க கலாச்சாரம், வாழ்வியலை காட்டிய விதம் அருமை. மேக்கிங், கேமரா ஒர்க் சிறப்பு. பின்னணி இசை, பாடல்கள் கச்சிதம்.

க்ளாப்ஸ்

நடிகர்களின் பங்களிப்பு

பதற்றத்தை தரும் ஒரு சில காட்சிகள்

மேக்கிங்

பல்ப்ஸ்

ஃப்ராங்கென்ஸ்டெய்ன் பேண்டஸி கதையில் பெண்ணியம் சார்ந்த கருத்துக்கள் ஓவர்டோஸ் ஆனது

மொத்தத்தில் இந்த The Bride! மேடையில்தான் கண்கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருக்கிறாள்; பந்தியில் சுவை குறைந்த உணவையே தந்திருக்கிறாள்.