ஹாலிவுட்டில் பிரபல நடிகர்களான ராபர்ட் பேட்டின்சன், ஜெண்டயா நடிப்பில் வெளியாகியுள்ள தி டிராமா திரைப்படம் நம்மை கவர்ந்ததா என்று பார்ப்போம்.

கதைக்களம்



The Drama: திரை விமர்சனம் - Related Image

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் இயக்குநராக வேலைபார்க்கும் சார்லி தாம்சன் (ராபர்ட் பேட்டிங்சன்), ஒரு கபேயில் எம்மா ஹார்வுட்டை (ஜெண்டயா) சந்திக்கிறான்.

அவளுக்கு ஒரு காது கேட்காது என்பது அறியும் சார்லி, எம்மாவுடன் பேசத் தொடங்க இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.



The Drama: திரை விமர்சனம் - Related Image

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அவர்கள் இருவரும் தங்களது திருமணத்தை நேர்த்தியாக நடத்த திட்டமிடுகின்றனர்.

டிஜே-வாக பாலின் என்ற பெண்ணை நியமிக்கின்றனர் சார்லி-எம்மா ஜோடி. ஒருநாள் பொதுவெளியில் பாலின் போதைப்பொருள் பயன்படுத்துவதை எம்மாவும், சார்லியும் பார்க்கின்றனர்.



The Drama: திரை விமர்சனம் - Related Image

அதனால் அவரை வேலையில் இருந்து நீக்குவது குறித்து தங்கள் தோழி ரேச்சல் மற்றும் மைக் ஆகியோருடன் இருவரும் விவாதிக்கின்றனர்.

அப்போது ஒவ்வொருவரும் அநேகமாக தவறான காரியங்களை செய்திருக்கலாம் என்று ரேச்சல் வாதிட, நான்கு பேரும் தாங்கள் செய்த மிக மோசமான செயல்களை ஒவ்வொருவராக ஒப்புக் கொள்கின்றனர்.

சார்லி, ரேச்சல், மைக் மூவரும் கூறும் செயல்கள் வேடிக்கையாக இருக்க, எம்மா கூறியது அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது.

அது ரேச்சலை கோபத்தின் உச்சிக்கு கொண்டுசெல்ல, எம்மா சிறுவயதில் செய்த செயலால் அவரை திருமணம் செய்துகொள்ளலாமா என்று சார்லி தயங்குகிறான்.

அதன் பின்னர் சார்லி, எம்மாவின் திருமணம் நடந்ததா? அவர்கள் இருவரும் என்ன முடிவெடுத்தார்கள் என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

ஹாலிவுட்டில் லைம் லைட்டில் பரபரப்பாக பேசப்படும் இரண்டு நடிகர்கள் ராபர்ட் பேட்டின்சன், ஜெண்டயா.

இவர்கள் இருவரும் இணைந்து ஒரு ரொமாண்டிக், காமெடி டிராமா படத்தில் நடிக்கின்றனர் எனும்போதே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு உருவானது.

அதையும் தாண்டி இப்படத்தில் எடுத்திருக்கும் கதைக்கரு என்பது உண்மையிலேயே சீரியஸான ஒரு விஷயம்தான்.

அதை இயக்குநர் மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார் என்றே கூறலாம். ரொமாண்டிக், காமெடி படங்களுக்கே உரித்தான டார்க் காமெடி, அதீத ரொமான்ஸ் காட்சிகள் படம் முழுக்க உள்ளன.

ஆரம்பக்கட்டத்தில் திடீரென வரும் ஒரு படுக்கையறை காட்சி நிச்சயமாக பார்வையாளர்களை திக்குமுக்காட செய்யும். அதேபோல் கிளைமேக்ஸிற்கு முன்பாக ஹீரோ பேட்டின்சன் செய்ய முயற்சிக்கும் ஒரு விஷயம் அய்யய்யோ ரகம்.

நடிப்பைப் பொறுத்தவரை ராபர்ட் பேட்டின்சன் அப்பாவியான இளைஞராக முகபாவனைகளில் காட்டி ஸ்கோர் செய்கிறார்.

அதே சமயம் வசன மொழியிலேயே காமெடியும் செய்து அசத்துகிறார். ஜெண்டயா நம்மை எதாவது செய்துவிடுவாளோ என்று லியோ படத்தில் த்ரிஷாவைப் போல் சந்தேகப்பட்டு பயப்படும் காட்சிகளில் எல்லாம் குபீர் சிரிப்பை வரவழைக்கிறார் பேட்டின்சன்.

ஆனால் ஜெண்டயா அவரை விட ஒரு படி மேலே நடித்திருக்கிறார்.

கோபம், விரக்தி என பல முகபாவனைகளை அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக காபி மக்கை குப்பைத் தொட்டியில் பார்த்த பின் அவர் பேசும் காட்சி அசத்தல்.

ரேச்சலாக அலானா ஹைம், மைக்காக மமௌடொவ், மிஷாவாக ஹைலே கேட்ஸ் ஆகியோர் எதார்த்த நடிப்பை நன்றாக வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

படத்தில் பிரச்சனை என்னவென்றால் வசனங்களாகவே காட்சிகள் நகர்வதுதான். என்னதான் ரொமாண்டிக், காமெடி டிராமாவாக இருந்தாலும் சிறிய கதைக்கருவை எடுத்துக்கொண்டு இந்த அளவிற்கு பேசித்தள்ளியிருக்க தேவையில்லை.

டேனியல் பெம்பர்டனின் இசையும், அர்செனி கச்சாதுரனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம். ஜோஷ்வா ரேமண்ட் லீயின் படத்தொகுப்பு கச்சிதம்.

க்ளாப்ஸ்

ராபர்ட் பேட்டின்சன், ஜெண்டயா

காமெடி காட்சிகள்

கதைக்கரு

இசை

பல்ப்ஸ்

அதீத உரையாடல் காட்சிகள் ஒரு கட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துவது.

மொத்தத்தில் இந்த தி டிராமா கொஞ்சம் சோதிக்கும் மெலோ டிராமாதான். ரொமாண்டிக், காமெடி பட விரும்பிகள் ரசிக்கலாம்.